வணக்கம் நண்பர்களே !
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுகிறேன்! உங்கள் அனைவருக்கும் காலம் கடந்த இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்!!!
இந்த பதிவு , அறியாத வயது சிந்தனை பற்றியது . சிறு வயதில் நமது மூளைஅதிகமாக யோசிக்கும்! உதாரணத்துக்கு ரேடியோ எப்படி பாடுகிறது , சைக்கிள் எப்படி ஓடுகிறது ! இப்படி ஒவ்வொருவருக்கும் நிறைய இருக்கும் ! நான் யோசித்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் ! கொஞ்சம் மடத்தனமாக இருந்தாலும் இப்போது நினைக்கும்போது சிரிப்புதான் வருகிறது. சிறு வயது என்பதால் நீங்களும் அந்த எண்ணத்துடனே படிக்கவும்.
எங்கள் வீட்டில் டிவி வந்தது 1988 ல் . அப்போது,டிவியின் உள்ளே ஆட்கள் எப்படி வருகிறார்கள் என யோசித்தேன் அதன் விளைவாக நானே ஒரு அதீத கற்பனை செய்து கொண்டேன் .பின் நாளில் அது எவ்வளவு பெரிய அறியாமை என நினைத்து நானே சிரித்து கொள்வேன் . அதாவது டிவி ஓடும்போது நடிகர்கள் ,செய்தி வாசிப்பவர்கள் அனைவரும் டிவி யின் உள்ளே இருப்பார்கள் எனவும், டிவியை அனைத்துவிட்டு நாம் வெளியில் சென்றவுடன் நமது டிவிக்குள் இருந்து வெளியே வந்து வீட்டுக்குள் வந்து ஆடுவார்கள்,செய்தி வாசிப்பர்கள் என்று நினைத்து பலமுறை வீட்டை பூட்டிவிட்டு ஜன்னல் வழியே பார்த்திருக்கிறேன் . யாரும் வீட்டில் இருக்க மாட்டார்கள் . நாம் வருவது அவர்களுக்கு தெரிந்திருக்கும் என நானே சமாதானம் செய்து கொள்வேன் ! பின்னர் நண்பன் சொன்ன விஷயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது ! அவன் என்னைவிட கொஞ்சம் அறிவாளி!
அவன் சொன்னது , டிவி போட்டவுடன் ஆண்டனா வயர் வழியாக அனைவரும் வந்து நடிப்பார்கள் ! டிவி அணைத்தவுடன் மறுபடியும் அந்த வயர் வழியாக சென்னைக்கு போய்விடுவார்கள் என்று ! ( நான் சொல்லல அவன் என்ன விட அறிவாளின்னு). நல்ல வேளை இந்த விஷயத்த நான் யார்கிட்டயும் சொல்லல ! சொல்லிருந்தா என்னை என்ன நினைப்பார்கள் !
1990 காலத்தில் , எங்கள் கடை பிரதான சாலையில் இருந்ததால் நிறைய பேர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து இருங்கி எங்கள் கடைக்கு குளிர்பானம் அருந்தி செல்வர். அப்போது நான் யோசித்தது , இந்த இரண்டு சக்கர வாகனம் எப்படி ஓடுகிறது ? பலமுறை கூர்ந்து கவனித்தேன் . ஒரு விஷயம் புலப்பட்டது . வண்டியை ஸ்டார்ட் செய்கிறார்கள் , காலை மேலே வைக்கிறார்கள் , வண்டி செல்கிறது .( Accelerator கையில் இருப்பதை கவனிக்கவில்லை) அதனால் , வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன் காலை மேலே வைத்ததும் கிளம்பிவிடும் போலிருக்கிறது என எண்ணிக்கொண்டு இருந்தேன்(அடங்கொய்யால என நீங்க நினைக்கிறது எனக்கு புரிகிறது ) பின்னர் என் தந்தை ஒரு டிவிஎஸ் 50 வாங்கி வந்தபின் அதை ஓட்ட பழகும்போதுதான் accelerator என்ற ஒன்றை திருக வேண்டும் என்று .
இதே போல என் நண்பனும் ஒரு முறை யோசித்ததை என்னிடம் சொன்னான்
( நம்ம கூட சேர்ந்தவன் எல்லாம் இப்படித்தான்) அதாவது அவர் தந்தை லாரி வைத்திருக்கிறார் . வண்டியை reverse எடுக்கும்போது பின்னால் பார்த்துகொண்டே எடுப்பாராம் . அதனால் என் நண்பன் நினைத்திருக்கிறான் , வண்டியை முன்னால் பார்த்து ஓட்டும்போது வண்டி முன்னால் போகும் , பின்னால் பார்த்து ஓட்டும்போது பின்னாடி போகும் .
பின்குறிப்பு : பிற்காலத்தில் பட்டயம் இயந்திரவியல் படித்து நாங்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றது ! ஸ் ஸ் ஸ ப்பா ! முடியல !
என்ன நண்பர்களே ! உங்களுக்கும் இந்த மாதிரி ஏதாவது அனுபவம் இருந்தால் கருத்துரை பெட்டியில் எழுதுங்கள் ! சிறு வயது ஞாபகங்கள் அனைத்தும் போக்கிஷம்தான் !
நன்றியுடன்
இரா.மாடசாமி
Tweet | |||||

பேருந்துகளில் எவ்வளவு வேகமாக ஸ்டியரிங் வீலை ஓட்டுனர் சுலற்றுகிராரோ அவ்வளவு வேகமாக வண்டியும் போகும் என நான் நினைப்பேன்!!
ReplyDeleteஉண்மைகள் வயது ஆக ஆக அனுபவம் என்னும் கேடராக்ட் நம்மை உண்மையைப் பார்ப்பதில் இருந்து மறைக்க ஆரம்பிக்குமாம் குழந்தை தான் உள்ளதை உள்ளபடி பார்க்குமாம்!!