Tuesday, 22 April 2014

தயவு செய்து ஓட்டுப்போடுங்கள் !!!

வணக்கம் நண்பர்களே !
இந்தப்  பதிவு  எனக்கு மிகவும் பிடித்த திரு சுஜாதா அவர்களின் கற்றதும் பெற்றதும் புத்தகத்திலிருந்து எடுத்து எழுதப்பட்டது . இன்றைய தேதிக்கு இது கொஞ்சம் outdated ஆக  இருந்தாலும், இந்த சமயத்தில் இந்த பதிவை எழுவது பொருத்தமாக இருக்கும்.வீட்டில் படித்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது  அது  அப்படியே உங்களின் பார்வைக்கு.

 ஐ டி கார்டு இல்லை என்றாலும் வோட்டுப் போடலாம் .... போட வேண்டும் . யாருக்கு என்று என்னைக்  கேட்டால் , கீழ்காணும் காப்பி ரைட் செய்யப்பட்ட என் சொந்தக் குறிப்புகள் உங்களுக்கு உதவலாம் .-- சுஜாதா

1. இருப்பதற்க்குள் இளைஞர் அல்லது அதிகம் படித்தவருக்கு வோட்டுப் போடுங்கள்.சாதி பார்க்காதீர்கள்.உங்கள் சாதியென்றால் ஒரு பரிவு உணர்ச்சி இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த ஆள் முகத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா, யோசித்துப் பாருங்கள். டிவி யில் பார்த்தால் போதாது . முதலில் அவர் உங்கள் தொகுதிக்காரரா அல்லது வெளியிலிருந்து விதைக்கப்பட்டவரா என்று பாருங்கள் .


2. உங்கள் தீர்மானம் திடமாக இருந்தால் இன்னாருக்கு இன்ன காரணத்துக்காக போடப்போகிறேன் என்பதை சுற்றுப்பட்டவர்களுக்கும் சொல்லுங்கள் . உங்கள் மனைவி, மக்கள் , டிரைவர்,வேலைக்காரி , அல்சேஷன் என எல்லாருக்கும் சொல்லலாம் .

3.யாருக்கு என தீர்மானித்திருக்காத பட்சத்தில் உங்கள் வீட்டுக்கு முதல் முறையாக வோட்டு கேட்டு வந்தவருக்கு  போடுங்கள் ....தலையையாவது காட்டினாரே !

4. உங்கள் தொகுதியில் பெண்கள் போட்டியிட்டால் அவர்களுக்கு போடுங்கள் . முப்பத்துமூன்று விழுக்காடு என்று ஜல்லி அடித்துக்கொண்டிருக்கிறார்கள் . ஆணாதிக்க இந்தியாவில் அது வரவே வராது. பெண்கள் குறைந்த பட்சமாவது ஆதரிக்கப்படவேண்டியவர்கள் . மக்களவையில் கொஞ்சம் வாதிட்டு சண்டை போடும் சுஷ்மா சுவராஜ் , உமாபாரதி ,மாயாவதி போன்றவர்கள் மூலம் சலுகைகள் பெற வாய்ப்புள்ளது .அலங்காரத்திற்கு நிற்கும் சினிமா நடிகைகளை தவிர்க்கவும் .பெண் என்பதால் அனிமல் ஹஸ்பண்டரி இலாகவிலாவது டெபுடி அசிஸ்டன்ட் ஸ்டேட் மினிஸ்டர் பதவியாவது கொடுத்து தொலைப்பார்கள் .

5.இதற்க்கு முன்பு இருந்தவர் மறு தேர்தலை விரும்பினால் அவர் ஆட்சி காலத்தில் எப்போதாவது ஒரு முறையாவது உங்கள் தெருப்பக்கம் தலையைக் காட்டியிருக்கிறார் என்றால் அவருக்குப் போடலாம்.( நிலா டிவி யில் கிருஷ்ணகிரி தொகுதி மக்களை பேட்டி கண்டபோது ஒரு பெண்மணியை 'இப்ப இருக்கிற எம் பி யாருன்னாவது தெரியுமாம்மா உங்களுக்கு? என்று கேட்டதற்கு, எம். பி யா ... அப்படின்னா ?' என்று வியப்புடன் கேட்டார் .) எனவே  போடுவதற்கு முன் முகம் , அவர் கட்சி வேட்பாளராக இருந்தால் அந்த கட்சியின் சென்ற தேர்தல் வாக்குறுதிகளை ஒரு காப்பி வைத்து கொள்வது நலம். அதை காட்டி இதில் என்னென்ன நீங்கள் செய்திருக்கிறீர்கள் ? என்று கேட்டாலே பாதி பேர் மறைந்து விடுவார்கள் . அதே போல இந்த முறை கட்சி வேட்பாளர்களிடம் தேர்தல் வாக்குறுதி என்று குட்டியாக ரேஸ் புக் மாதிரி ஒரு புத்தகம் இருக்கும் அதை ஒரு பிரதி வாங்கி வைத்துகொள்ளுங்கள் . பத்து மாதத்தில் மறுபடி தேர்தல் வந்தால் கேட்பதற்கு , குறிப்பாக நிலையான ஆட்சி அமைக்க போகிறோம்' என்று யாராவது சொல்லிக்கொண்டு வந்தால் நாயை அவிழ்த்து விடுங்கள் . இந்தியாவில் நிலையான ஆட்சி இனி சாத்தியமில்லை . வரும் தேர்தலில் எந்த ஆட்சியாவது ஐந்து வருஷம் தாங்கினால் மொட்டை போட்டு கொள்கிறேன் .

6. சுயேச்சை வேட்பாளர்களுக்கு போடாதீர்கள் . வேஸ்ட் .

7. கொஞ்ச நாள் தையா தக்கா ஆட்டம் பாட்டம் , சிக்கு புக்கு , முக்காபுலா , போன்ற அறிவு சார்ந்த புரோகிராம்களை புறக்கணித்து பிரணாய் ராய் , ரபி பெர்னாட் , மாலன்  போன்றவர்கள் நடத்தும் தேர்தல் ப்ரோகிராம்களை பாருங்கள் . தூர்தர்ஷன் கூட பார்க்க்கலாம் . இருப்பதற்குள் பாத்திரத் திருடன் போல திருட்டு முழி முழிக்காதவராக , யாரைப் பார்த்தால் 'இவர் ஏதாவது செய்வார் .... முதல் நாளே உள்ளங்கை அரிக்காது ' என்று உங்கள் உள்ளுணர்வு சொல்கிறதோ அவருக்கு போடலாம் .(அமெரிக்கா இப்படித்தான் தேர்ந்தெடுக்கிறது) அல்லது  பத்து வார்த்தை கோர்வையாக பேச தெரிந்திருந்தால் போடலாம் .

இவ்வளவு செய்தும் ஒன்றுமே தீர்மானிக்க முடியவில்லை என்றால் சீட்டு எழுதி வீட்டில் யாரையாவது தேர்ந்தெடுக்க சொல்லுங்கள் . அதிர்ஷ்டமுள்ளவர்கள் வெல்லட்டும் . ஆனால் கட்டாயமாக வோட்டு போடுங்கள் . அது அவசியம். (நோட்டா பயன்பாட்டிற்கு முன் இந்த கட்டுரை வந்ததால் சாருக்கு அதை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை வந்திருந்தால்  அதனை சொல்லியிருப்பார் என நினைக்கிறேன் ! )

பார்லிமென்ட்  தொங்கினாலும் முடங்கினாலும் பரவாயில்லை . சண்டை வந்தால் விட்டு கொடுப்பது இல்லை . மேலும் முதன் முதலாக இந்தக் கோமாளிகள் பரஸ்பரம் கவிழ்த்துக்கொண்டு , மர மேஜைகளைத் தட்டி வெளியேற்ற விளையாட்டு விளையாடி கொண்டிருக்கும்போது நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் பத்திரமாக இருந்திருக்கிறது . அது முன்னேற்றத்திற்க்கான அறிகுறி . ஜப்பான் , பிரான்ஸ் , இத்தாலி , போன்ற நாடுகளில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை அரசியல் மாற்றங்கள் இருந்தும் அந்த நாடுகளில் பொருளாதாரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. நம் இந்தியப் பொருளாதாரமும் அந்த நிலைக்கு வந்திருப்பது ஆரோக்கியமான விஷயம்.அது இப்போது மனிதர்களை சாராமல்  பருவமழையை சார்ந்துள்ளது.பருவ மழையும் இவ்வளவு பாவாத்மாக்கள் இருந்தும் தவறில்லாமல் பெய்கிறது .

தயவு செய்து வோட்டுப்போடுங்கள் !! டாமினோ எபெக்ட் என்று ஒன்று உள்ளது.அதன் மூலம் உங்கள் ஒற்றை வோட்டை வைத்துக்கொண்டு தேசத்தின் தலைவிதியை படித்தவர்களால் மாற்ற முடியும் .


நன்றி

திரு. சுஜாதா
கற்றதும் பெற்றதும்
விசா பப்ளிகேசன்

நன்றியுடன்
இரா. மாடசாமி


Related Posts Plugin for WordPress, Blogger...

2 comments :

  1. பொருத்தமான... தேவையான பதிவு...

    ReplyDelete
  2. நல்லா சொல்லியிருக்கார்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger