வணக்கம் நண்பர்களே !
இதற்க்கு முன் நான் எழுதிய அப்பாவும் நானும் பகுதியை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் . படிக்காதவர்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் .
அப்பாவும் நானும்! தொடர்பதிவு-1!
அப்பாவும் நானும்!! -தொடர் பதிவு -2
குலாப்ஜாமூன்
அப்போது எனக்கு ஒரு 10-12 வயது இருக்கும் என நினைக்கிறேன் . அன்று பள்ளி விட்டு வீட்டிற்கு வந்தவுடன் , லேசாக காய்ச்சல் இருந்ததை அறிந்த எனது அப்பா என்னை மருத்துவரிடம கூட்டி சென்று பின்னர் அங்கிருந்து நேராக எங்களது கடைக்கு கூட்டி சென்றுவிட்டார் . அங்கு ஒரு இருக்கையை போட்டு என்னை அமர வைத்தார் . நான் அப்படியே கடையை நோட்டமிட்டபடியே அப்பாவுக்கு உதவியாக எடுத்து கொடுத்துக்கொண்டு இருந்தேன் . அப்போதுதான் அது எனது கண்ணுக்கு புதிதாக தெரிந்தது.
நான் ," அப்பா அது என்னதுப்பா "?
அதுவா ! குலாப் ஜாமூன் !!
சொல்லி கொண்டிருக்கும்போதே ஒரு வாடிக்கையாளர் அதனை கேட்டார்.
உடனே அப்பா அதற்க்கான பிரத்யேக கண்ணாடி கிண்ணம் ஒன்றை எடுத்து அதில் குலாப் ஜாமூன் ஒன்றை போட்டு கொடுத்தார் . இப்போது குலாப் ஜாமூனை விட அந்த கண்ணாடி அழகாக தெரிந்தது எனக்கு .
அதை சாப்பிட்ட அந்த நபர் அதனை அப்பாவிடம் கொடுக்க , அப்பா என்னிடம் கொடுத்து , "ஓரமா வை ! என்றார் .
அதை தடவி தடவி பார்த்துக்கொண்டே என்னை அறியாமல் கீழே விட்டு விட்டேன் . அது பெரிய சத்தத்துடன் கீழே விழுந்து நொறுங்கியது .
சத்தம் கேட்டு திரும்பிய அப்பா எனது தலையிலும், முதுகிலும் அதே போன்ற சத்தத்தை ஏற்ப்படுத்தினார் .
அதை கண்ட வாடிக்கையாளர் , என்ன சார் ? பையன இந்த அடி அடிக்கிறீங்க !
என்றார் .
அட போங்க சார் ! 6 வது படிக்கிறான் ஒரு பொறுப்பு இருக்க வேணாம் ? என்ன ஒரு அஜாக்கிரதை ! என்றவாறே உடைந்த கண்ணாடி துகள்களை எடுத்தார்.
அழுதுகொண்டே கடையின் உட்புறமுள்ள ஒரு அறையில் ஒரு ஓரமாக படுத்து கொண்டேன். கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
அதற்குப்பின் எதுவும் பேசவில்லை. ஏங்கி ஏங்கி அழுதேன் ! அப்படியே கண்களை மூடிக்கொண்டு தூங்குவது போல நடித்தேன்.
சிறிது நேரத்துக்கு பின் அந்த அறைக்கு வந்த அப்பா, ஒரு நிமிடம் என்னையே பார்த்துகொடிருந்தார் .
ஒரு வேளை அடித்ததற்காக வருந்தியிருக்கலாம் என நினைக்கிறேன் !
கடையை அடைக்கும் முன் , தம்பீ! என அழைத்தார் .
சத்தம் கேட்டு எழுந்து வந்தேன் .
என்னை பார்த்து, நீ செஞ்சது தப்பா ? இல்லையா ! இப்படி அஜாக்கிரதையா இருக்கலாமா ! என கேட்டார் .
நான் அவர் சொல்வதை அப்படியே ஆமோதித்தேன் !
இனிமேல் ஜாக்கிரதையா இருக்கணும் சரியா ? என ஒரு குலாப்ஜாமூனை அதே போன்ற ஒரு கண்ணாடி கிண்ணத்தில் போட்டு நீட்டினார் !
நான் வாங்காமல் நின்றேன்.
என்னை முத்தமிட்டு கண்ணீரை துடைத்து விட்டார் . பின்னர் , அவரே எடுத்து ஊட்டியும் விட்டார் !
அடித்த வலி மறைந்து அன்பில் வலியை உணர்ந்தேன் !
குலாப்ஜாமூன் இரண்டு மடங்கு இனிப்பதாக தோன்றியது !
*********************************************************************************
அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
குறிப்பு : இப்பொது, வானவில் தளத்தின் பேஸ்புக் பக்கத்தை உருவாக்கியிருக்கிறேன்.பதிவுகளை பெற விரும்புவோர் வானவில் பக்கத்தை லைக் செய்து , பதிவுகளை பெற்றுக்கொள்ளலாம் !
**********************************************************************************
நன்றி
வானவில் பேஸ்புக் பக்கம் வடிவமைப்பு தகவல் உதவி : திரு.பிரபு கற்போம் வலைத்தளம்
தற்போதைய வானவில் தளத்தின் வடிவமைப்பு உதவி திரு .தங்கம் பழனி அவர்கள் தொழில்நுட்பம் வலைத்தளம் )
நன்றியுடன் !
இரா. மாடசாமி
Tweet | |||||

சுவையான அன்பின் (ஜாமூன்) பதிவு... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமலரும் நினைவுகள்....
ReplyDelete