Tuesday, 17 December 2013

இந்த கடையில மொபைல் வாங்குறீங்களா ! கொஞ்சம் யோசிங்க !

வணக்கம் நண்பர்களே !
                                                    இது ஒரு விழிப்புணர்வு பதிவாக எழுதுகிறேன் ! இன்றைய வாழ்வில்  அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு கருவி அலைபேசி. இந்த அலைபேசி வாங்க சென்ற இடத்தில் நான் பட்ட வேதனையை உங்களுடன் பகிர்கிறேன் !தமிழகத்தின்  பலநூறு கிளைகளை கொண்டகடை ! செய்தி தாள்களில் ஒரு பக்க விளம்பரம் கொடுக்கும்  கடை !  அமாவாசை, கார்த்திகை தீபம் , சங்கடகர சதுர்த்தி இந்த நாளுக்கு கூட சிறப்பு தள்ளுபடி கொடுக்குற  கடை ! தனியார் சேனல் நிகழ்சிகளை Sponsor பண்ற கடை ! இத எல்லாவற்றையும் விட வருஷா வருஷம் கொடுக்குற காலண்டர்ல தமிழ் இன வரலாறு அச்சிட்டு கொடுக்குற கடை ! நல்ல மொபைல் வாங்க நம்பிக்கையான இடம் ! இதுக்கு மேலயும்  இந்த கடைக்கு விளக்கம் கொடுக்கனுமா ! நீங்களே புரிஞ்சிகிட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன் !

 என் மனைவி அவருடைய பழைய அலைபேசியை மாற்றி தர  சொல்லி ரொம்ப நாட்களாகவே கேட்டு கொண்டிருந்தார் ! நானும்  ஒரு  நாள் மேலே சொன்ன கடைக்கு சென்று ஒரு அலை பேசி வாங்க சென்றேன் .  வீட்டு உபயோகத்திற்காக என்று அதிக வசதிகள் இல்லாத ஒரு நோக்கியா போனை கேட்டேன் ! ஆனால் அந்த கடையின் விற்பனை பிரதிநிதி , சார் எல்லா வசதியோட அதே விலையில் ஒரு போன் வந்திருக்கு பாக்குறீங்களா என்று என்னிடம் கேட்டான் ! அந்த அலைபேசி தற்போதுதான் மார்க்கெட்டில் வந்து வெற்றியடைடைந்து கொடிருப்பதாகவும் என்னிடம் சொன்னான்  ! சரி நானும் அதே அலைபேசியை வாங்கி கொடுத்து விடலாம் என எண்ணினேன் !ஏன் எனில்,அதே விலை ! அதிக வசதி ! மனைவியும் மகிழ்ச்சி அடைவார் என வாங்கி விட்டேன்! வீட்டில் மனைவியிடம் கொடுத்ததும் அவரும் மகிழ்ச்சியடைந்தார் !

அடுத்த நாள் ! எனது அலைபேசியில் இருந்து எனது மனைவியின்  அலைபேசிக்கு அழைத்தேன் ! அழைப்பு போகவே இல்லை !  வீட்டிற்கு வந்து கேட்டால்  டவர் கிடைக்கவேயில்லை என்று சொன்னார் ! சிம் மாற்றி எனது அலைபேசியில் போட்டால் டவர்  கிடைத்தது ! நேரடியாக கடைக்கு சென்று கேட்டோம் ! அவர்கள் கூலாக , விற்பனை  பண்ணுறது மட்டும் தான் எங்க வேலை ! கோளாறு ஏற்பட்டா  கம்பனியோட  வாடிக்கையாளர் மையத்துக்கு தான் போகணும்னு சொன்னங்க ! நான் கேட்டேன் அலைபேசி வாங்கி  முழுசா ஒரு நாள் கூட ஆகலையே ! எனக்கு தெரியாது,  நீங்க தான் மாற்றி தரணும்னு என்று சொன்னேன் !  அதற்க்கு அவர் , சரிங்க மாற்றி எல்லாம் தர முடியாது,வேணும்னா நானே எங்க ஆளை அனுப்பி  சரி பண்ணி தர சொல்லுறேன் , ஆனா 10 நாள் ஆகும் என்றார் ! எனக்கு தூக்கி வாரி போட்டடது ! பத்து  நாள் நான் என்ன பண்ணுறது ? உடனே  அவரிடம் நானே நேராக சென்று சர்வீஸ் செய்து கொள்கிறேன் என்று வாங்கி வந்து விட்டேன் . அடுத்த நாள் ஆபீஸ்க்கு  அரை நாள் லீவ்  சொல்லிவிட்டு நேராக அந்த வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்றேன் ! அங்கு போனவுடன் எனக்கு பேரதிர்ச்சி ! என்னை போலவே  அதே கடையில் , அதே கம்பெனி மொபைல் வாங்கி பாதிக்கப்பட்டோர் நிறைய பேர் இருந்தனர் ! அதற்க்கு டோக்கன் வேறு !எனது  டோக்கன் 46 என கொடுத்தனர். காலை பத்து மணி வரை மட்டுமே  46 டோக்கன் என்றால் , அன்று மாலை 6 மணி வரை எத்தனை டோக்கன் இருக்கும் என்று நீங்களே பார்த்து கொள்ளுங்கள் !   ஒரு அரை மணி நேரம் கழித்து எனது முறை வந்தது ! அந்த சேவை மைய ஊழியர் எனது மொபைலை வாங்கி , என்ன பிராப்ளம் சார் ? என்றார். அனைத்து குறைகளையும் கேட்டறிந்து ஒரு வாரம் கழித்து ரெடி  ஆனதும் நாங்களே போன் செய்வோம் என்றனர் !  பின்னர்அங்கிருந்து அலுவலகம் சென்றேன்.  இதனால்  எனக்கு 100 ரூபாய் பெட்ரோல் செலவு !

சொன்னது போலவே ஒரு வாரம் கழித்து என்னை அழைத்து  மொபைலை வாங்கி செல்லுமாறு சொன்னார்கள் !  நானுன் வாங்கி வந்து விட்டேன் ! ஒரு வழியா பிரச்சினை முடிஞ்சது என நினைத்தேன் ! சரியாக  இரண்டு நாள் கழித்து , சார்ஜ் ஏறவில்லை என மறுபடியும்  புகாரை வாசித்தார் . மறுபடியும் 1/2 நாள் லீவ், அதே மையம் , டோக்கன் ,  புகாரை பெற்று கொண்டு , சார் ! இது மதர்போர்ட் ப்ராப்ளம்,  இங்க சரி பண்ண முடியாது, ஹெட் ஆபீஸ் அனுப்பித்தான் சரி பண்ண முடியும் அதனால ஒரு பத்து நாள் ஆகும் என்றான்.
சனியன தூக்கி தோளில் போட்டாச்சு ! அப்புறம் என்ன பண்றது ! வேறு  வழியில்லை என கொடுத்து வந்தேன் !

ஒரு வாரம் கழித்து மறுபடியும் அழைத்து  மொபைல்  சரி செய்து விட்டதாக சொன்னார்கள் ! இந்த முறை அவர்களிடம் இனி ஒன்றும் பிரச்சினை வராது என உறுதியாக கேட்டு தெரிந்து  கொண்டபின் தான் வாங்கினேன் !

இரண்டு நாள் கழித்து , என் மனைவி எனக்கு மொபைல் போன்  வேண்டவே வேண்டாம் ! என்றார் . என்னாச்சு என ஒரு தயக்கத்துடன் கேட்டேன் ! கால் அதுவாகவே அட்டெண்ட் ஆகுது  என்று சொன்னார் ! மேலும் ,  எந்த நேரத்துல வாங்குனீங்களோ ? இப்படி என்னை கழுத்தறுக்குது என அலுத்து கொண்டார் !  நான் சொன்னேன் , கடைக்காரனுக்கு நல்ல நேரம் ! எனக்கு ராகு  காலம்!! .

மறுபடியும் அந்த வாடிக்கையாளர் சேவை மையம் என்னும் சனீ ஸ்வர பகவானை சந்திக்க சென்றேன் !  செக்யூரிட்டி இப்போது  என்னை பார்த்தவுடன் வாங்க சார்! வாங்க! என ரெகுலர் கஸ்டமர் போல அழைத்தார் ! அடப்பாவிகளா ! உலகத்துலேயே , கஸ்டமர் சர்வீஸ் சென்டேருக்கே கஸ்டமர் நானாத்தான் இருப்பேன் என நினைத்து  கொண்டேன்!அப்புறம் என்ன  ! இந்த பதிவ படிச்சுகிட்டு வர்ற உங்களுக்கே தெரியுமே ! ஆங் ! அதேதான் !(5 ம் பத்தியை படிக்கவும் )

ஒரு வாரம் கழிச்சு, அந்த மொபைல் போனை அடி மாட்டு விலைக்கு விற்று விட்டு , அந்த கடை, அந்த போன் கம்பெனி, அந்த கஸ்டமர் கேர் சென்டர் எல்லாத்துக்கும் முனியப்பன் கோயில்ல ஒரு ரூபாய் காசு  வெட்டி சாபம் கொடுத்துட்டு, என் மனைவிக்கு , வேறு  ஒரு நல்ல !!!! மொபைல் வாங்கி கொடுத்தேன் !

 மொத்தத்தில் அந்த அலை பேசியின் விலையில் பாதி தொகையை , அதனை சர்வீஸ் செய்வதற்காக அலைந்ததற்கு செலவழித்திருப்பேன் !


நல்ல மொபைல் வாங்க நம்பிகையான  இடமாம் ! அன்னையிலேருந்து
நானும் அந்த கடைக்கு போவதில்லை ! நண்பர்களுக்கும் போக வேண்டாம் என அறிவுருத்துகிறேன் ! இப்போது உங்களுக்கும் !

நன்றியுடன் !

இரா. மாடசாமிRelated Posts Plugin for WordPress, Blogger...

2 comments :

  1. திரு மாடசாமி அவர்களே,

    kadaiyin peyar : Poorvika mobiles,
    MObilein peyar : Micromax.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger