Tuesday 9 October 2012

அப்பாவும் நானும்!! -தொடர் பதிவு -2

வணக்கம் நண்பர்களே !
                                                அப்பாவும் நானும் தொடர்பதிவு  எனக்கு பழைய நினைவுகளை மீட்டுத்தருகிறது . பதிவர்கள் மற்றும் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுத்தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.இனி இந்த பதிவில் தொடர்வோம் !

-------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு ஞாயிற்று கிழமை . ஏழாம் வகுப்பு படித்துகொண்டிருந்த  நான் சாவகாசமாக தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த அப்பாவிடம், காதல் என்றால் என்ன ? என கேட்டேன் !  சமையல் அறையிலிருந்த என் அம்மா தோசை கரண்டியோடு அடிக்க வந்துவிட்டார் ! அதை தடுத்து நிறுத்திய  அப்பா,  அம்மாவிடம் " இதுல என்ன தப்பு இருக்கு" நம்மகிட்ட கேட்காம யார்கிட்ட போய் கேட்பான் ! என கூறி அம்மாவை அனுப்பிவைத்தார் . பின் என்னிடம் , உனக்கு அம்மாவை பிடிக்குமா ? அப்பாவை பிடிக்குமா ? என கேட்டார் . ரெண்டு பேரையுமே ! என்றேன் நான் . அவர் விடாமல் , யாரை அதிகமாக பிடிக்கும் என்றார் . இப்போது  சற்று நேரம் யோசித்துவிட்டு "அம்மா " என்றேன் .  இதுதான் காதல் என்றார் . புரியவில்லை என்றேன் . ஒருவர் மீது அளவு கடந்த நேசம் வைப்பதற்கு பெயர்தான் காதல் என்றார் ! எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு அழகாக சொல்லி புரியவைத்துவிட்டார் ! அன்றிலிருந்து எனக்கு அப்பாவின் மீது அளவுகடந்த நேசம் வந்துவிட்டது! மன்னிக்கவும் , காதல் வந்துவிட்டது !
-----------------------------------------------------------------------------------------------------------------------

சென்னைக்கு வந்த புதிதில் வியாபாரம் சுமாராக இருந்ததால் அப்பா ஒரு சிறிய ஒண்டி குடுத்தனம் உள்ள வீடு  ஒன்றை  வாடகைக்கு பார்த்து எங்களை குடியமர்த்தினார் . பின்னர் உறவினர் ஒருவர் எங்கள் தெருவுக்கு அடுத்து ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி எங்களுக்கு வாடகைக்கு விட்டார். அந்த குடியிருப்பில் உள்ள அனைத்து வீட்டிலும் கணவன் மனைவி அனைவரும் நன்கு படித்து வேலைக்கு செல்பவர்கள் ! இதை கவனித்த நான் ஒரு நாள் அப்பாவிடம் , நம்ம அடுக்கு மாடி குடியிருப்புல  நம்ம அம்மா மட்டும்தான் படிக்கலப்பா ! என்றேன் .  பொளேரென அடி விழுந்தது என் கன்னத்தில் ! அப்பாவேதான் ! அம்மா மௌனமாகவே இருந்தார் !
அப்பா,என்னடா ! ரொம்ப படிசுட்டோம்னு திமிரா உனக்கு? அம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேள் !என்றார்.மன்னிப்பு கேட்டேன் !  நான் செய்த தவறுக்கு வெட்கி தலைகுனிந்தேன் !  யாரையும் தரகுறைவா பேசக்கூடாது ! நீ அவங்க வயித்துல இருந்துதான் வந்த அத மறந்துறாத !  என்றார் . அவர் பேச பேச என் மண்டையில் சம்மட்டியில் அடித்தது போல் இருந்தது. எவ்வளவு பெரிய தவறை செய்துவிட்டோம் என அன்று தான் உரைத்தது.  அந்த நிகழ்வுக்கு பிறகு  இன்றளவும் அவர்  சொன்ன வார்த்தைகளை காப்பாற்றி வருகின்றேன் .



நன்றியுடன்
இரா.மாடசாமி.


Related Posts Plugin for WordPress, Blogger...

4 comments :

  1. பழைய நினைவுகளமீட்டிய மலரும் நினைவுகள் !

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger